தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Wednesday 26 August 2015

காரைக்குடியின்....குத்த..கைகள்


வறட்சி மிக்க மாவட்டம் 
இராமநாதபுரம், சிவகங்கையை உள்ளடக்கிய
 காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்.  

இந்த வறட்சி மாவட்டம் 
இன்று குத்தகைக்காரர்களின் 
வறட்சி போக்கும் மாவட்டமாக
 குத்தகைக்காரர்களின் 
வளர்ச்சி போற்றும் 
மாவட்டமாக   மாறி விட்டது.  

பல்வேறு குத்தகைகள் இருந்தாலும் 
மனிதனைச் சுரண்டும்.. 
மனித உழைப்பைச் சுரண்டும்.. 
ஒப்பந்த ஊழியர் குத்தகை  
அதிகாரிகளின் நேரடி ஆதரவில் 
அமோகமாக நடைபெற்று வருகின்றது.

ஒப்பந்த ஊழியர்கள் படும் 
அல்லல்கள் துன்பங்கள் துயரங்கள்
 அனைத்துக்கும் அடிப்படை காரணம் 
முறையான சரியான நேர்மையான 
குத்தகைக்காரனை 
கடந்த காலங்களாக தேர்வு செய்யாமையே. 

காரைக்குடியில்.. 
காவல் பணி சீருடை
காவல் பணி சீருடையின்றி,
கேபிள் குழி தோண்டும் பணி, 
அலுவலகப் பராமரிப்புப்பணி..

என நால்வகைப்பணிகளுக்கு 
குத்தகை விடப்படுகிறது. 
ஆண்டுக்கு ஒரு முறை குத்தகை மாற்றப்பட வேண்டும். 
ஆனால் இங்கோ ஆண்டுக்கணக்கில் 
குத்தகை ஆளவட்டம் போடுகிறது. 
காரணம் குத்தகைக்காரர்கள் 
குறிப்பிட்ட ஆட்களை
 வட்டம் போட்டுக்கொண்டதுதான். 

மேற்கண்ட நால்வகைப் பணிக்கும் 
இன்றைய தேதியில் முறையான 
நடப்பு அனுமதி பெற்ற குத்தகைக்காரர்கள் யாரும்  கிடையாது. 

அனைவருமே EXTENSION என்னும் நீட்டிப்பில்.. 
மீண்டும் சொல்கிறோம்.. 
நீட்டிப்பில்  காலம் தள்ளுகிறார்கள். 

அதிலும் காவல் பணிக்கான குத்தகை 
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக 
ஒரே நபருக்கு நீட்டிப்பில் செல்கிறது.  

சில குத்தகைக்காரர்களுக்கு SECURITY DEPOSIT 
என்னும் காப்புத்தொகை இன்றி 
குத்தகை வழங்கப்பட்டுள்ளது. 

கவனிப்புத்தொகையில்  
காப்புத்தொகை காணாமல் போகலாம்.
நமக்கு இதைப்பற்றிக்கவலை கொள்ள 
அவசியமில்லைதான்...

ஆனாலும் உழைக்கிற தொழிலாளிகளுக்கு..
  •  முறையான தேதியில் சம்பளம் கொடுக்கப்படாத போது..
  • உரிய சம்பளம் வழங்கப்படாத போது..
  • அவர்களது சேம நலநிதித்தொகை விழுங்கப்படும் போது..
  • மருத்துவ வசதி மறுக்கப்படும்போது..
  • போனஸ் கைவிரிக்கப்படும்போது..

தொழிற்சங்கம் என்ற முறையில் 
நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதன் ஆணிவேரை அலசிப்பார்க்க வேண்டிய 
அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

குத்தகைகள் முறைப்படுத்தப்பட வேண்டும்...
குத்த கைகள் அடையாளம் காணப்பட வேண்டும்...
இது போன்ற பிரச்சினைகளை .
இந்த மாவட்டத்தில் நாம் எழுப்பும்போது..
குற்றங்களை விட்டு விட்டு..
அதைச்சுட்டிக்காட்டுபவனை..
குற்றவாளியாக்கும் முயற்சியை மேற்கொள்வதை..
காலம்.. காலமாக 
தாத்தா காலம் முதல் 
பாண்டி.. பரமசிவம் காலம் வரை  
நாம் கண்டிருக்கின்றோம்...

இம்முறை நிர்வாகம்... 
நாம் சொல்லக்கூடிய பொருளில்.. உள்ள
மெய்ப்பொருள் மட்டுமே காணுமேயாயின்..
குத்தகையில் உள்ள மெய்யான பொருள் விளங்கும்...

நாம் மீண்டும் சொல்கிறோம்..
நரிகள் வலம் போகலாம்...
நரிகள் இடம் போகலாம்...
நமக்குக் கவலை இல்லை...
ஆனால்...
அந்த நரிகள் நேராக..
அதோ அந்த ஓலைக்குடிசையில்..
வெற்றுடம்பாய்.. வெந்த மனதாய்..
காய்ந்த வயிறாய்.. கசியும் கண்களாய்..
உறங்கிக் கொண்டிருக்கும் 
நம் அன்புக்குழந்தையாம்.. 
ஒப்பந்த ஊழியரின் குரல்வளையை 
நரிகள் குறி வைக்கும் என்றால்.. 
நாம் சும்மா இருக்க முடியாது...



No comments:

Post a Comment